×

அண்ணாமலை மிரட்டியே பழக்கப்பட்டவர் - அமைச்சர் பொன்முடி விளாசல்

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தவர்களை மிரட்டியே பழக்கப்பட்டவர்கள் எனவும், திராவிட மாடல் குறித்து அவர் புள்ளி விபரங்களுடன் கேட்டால், பதிலளிக்க தயாராக உள்ளேன் என்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சி நடைபெறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். புள்ளி விபரங்களோடு அண்ணாமலை கேட்டால், நான் அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளேன். அவர் மிரட்டியே பழக்கப்பட்டவர்; அவர் நிறைய படித்து தெரிந்து கொள்ள வேண்டும். சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை போதிப்பது தான் திராவிட மாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், ஈ.வெ.ரா., பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும் அறிவித்துள்ளார். அண்ணாதுரை, ஈ.வெ.ரா.,கருணாநிதி ஆகியோரின் நுால்களை படித்தால், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியல், சமுதாயம், சமூக நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்பதால் தான், சபாநாயகர் அப்பாவு இவைகளை, 'பாடத்திட்டங்களாக உருவாக்க வேண்டும்' என, தெரிவித்தார்.

 அதற்கான நடவடிக்கைகள் வரும் கல்வியாண்டிலேயே எடுக்கப்படும்.ஆஸ்திரேலியா போன்ற, வெளிநாட்டு பல்கலையுடன், கல்வி ஒப்பந்தம் போடும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் வெளிநாடு பல்கலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். தமிழகத்திற்கு கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது..இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.