×

ஜெயலலிதா சிறைக்கு சென்ற பிறகு தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமானது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 

2014ஆம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு சென்ற பிறகு தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமானது எனவும், தலைமை இல்லாத நிலையில் அதிகாரிகளும், முந்தைய ஆட்சியாளர்களும் தமிழகத்தை படுகுழியில் தள்ளி மோசமான பாதைக்கு எடுத்து சென்றுவிட்டனர் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதையடுத்து, திமுக சார்பாக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, பல இடங்களில் இந்த அரசு முன்மாதிரி அரசு என்று பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள். மக்கள் நலனுக்காக முழு திறனையும் கொண்டு செயல்படும் அரசு தற்போதைய அரசு. வந்த முதல் நாளிலேயே மகளிருக்கு இலவச பஸ் பயணம், கொரோனா உதவித்தொகை என்று சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது 2021 பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை முந்தைய அதிமுக அரசு சமர்பித்தது அப்போது கொரோனா 2வது அலைக்காக தமிழ்நாடு தயாராகவில்லை. 2021 நவம்பர் மாதம் சென்னையில் பெருமழை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை அதற்கும் தயாராக இல்லை. ஆனால் 2வது, 3வது கொரோனா அலை, சென்னை பெருமழை, பருவமழை பாதிப்புகளை உங்கள் பட்ஜெட்டை விட கூடுதலாக 10 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக கையாண்டது திமுக அரசு. 

2014ஆம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு சென்ற பிறகு தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமானது. தலைமை இல்லாத நிலையில், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை வரலாற்றில் இல்லாத அளவு மோசமாக மாறியது அதிகாரிகளும், முந்தைய ஆட்சியாளர்களும் தமிழகத்தை படுகுழியில் தள்ளி மோசமான பாதைக்கு எடுத்து சென்றுவிட்டனர். 2011ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி முடிந்த போது தமிழகத்தின் கடன்சுமை 1 லட்சம் கோடியாக இருந்தது ஆனால் 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இது 6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனை சரி செய்ய நிதித்துறை அனைத்து சீரிய முயற்சிகளையும் செய்து வருகிறது.