×

தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் ரூ.200 கோடிக்கு இனிப்பு விற்க இலக்கு - அமைச்சர் தகவல்

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் 200 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். இதனையடுத்து இனிப்புப் பொருட்களை பேக்கிங் செய்யும் புதிய எந்திர பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை ஆணையரும், மேலாண்மை இயக்குனருமான சுப்பையன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்த ராஜன், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆவின் பொருட்கள் ரூ.82.24 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அனைத்து விற்பனை யுக்திகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கூட்டுறவு அரசு நிறுவனங்கள், போக்குவரத்து துறை அரசுத்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ், ஆவின் பொருட்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.