×

உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் - அமைச்சர் முத்துசாமி

 

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும் எனவும்,  தனக்கும் அந்த விருப்பம் உள்ளது எனவும் அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். 

ஈரோடு கனி மார்க்கெட்டில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். எனவே எனக்கும் அந்த விருப்பம் உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் அங்கு நிற்கும். இதேபோன்று சத்தி, கோபி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் நிற்க கனி ராவுத்தர் குளம் அருகே மற்றொரு பஸ் நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இடம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இடம் வாங்கப்பட்டு அங்கும் பஸ் நிலையம் அமைக்கப்படும். எனவே ஒரே சமயத்தில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. பின்னர் அவைகள் நிரந்தர பஸ் நிலைய கட்டிட வசதியுடன் அமையும்.

அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகளை வரும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. அப்பணிகளை வரும் ஜனவரி 15-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரம் அச்சரப்பாக்கம் மற்றும் அரக்கோணம் வரையும் விரிவுபடுத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு பல அடிப்படை வசதிகள் உருவாகும். வளர்ச்சி மேலும் துரிதப்படும். எனவே தற்போது சென்னையில் உள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அலுவலகங்கள் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் புதிதாக உருவாக்கப்படும். ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும். புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால் ஏற்கனவே முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியபகுதியில் பல மனைகள் விற்பனையாகாமல் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.