×

அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவை தமிழக அரசின் நீட் மசோதா மீறுகிறதா? 

 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க சட்ட மசோதா அனுப்பப்பட்டது. இதை மறு பரிசீலனை செய்ய ஆளுநர் கூறியதை அடுத்து மீண்டும் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த சட்ட மசோதா குறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் கருத்துகளை கூறியுள்ளது. அதன்படி நீட் விலக்கு சட்ட மசோதா மாநில அரசின் அதிகாரத்திற்கு மீறியதாக உள்ளதா என ஒன்றிய சட்ட அமைச்சகம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழ்நாடு அரசு, மாநில அரசுக்கு இதனை நிறைவேற்ற போதுமான அதிகாரம் உள்ளது என்று ஆதாரப்பூர்வமாக எடுத்து கூறியுள்ளது. ஒன்றிய அமைச்சகத்தின் கேள்வி அடிப்படையில்லாதது என்று பதிலளித்துள்ளோம். மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு தான் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என பதில் அனுப்பி இருக்கிறோம்.

நீட் விலக்கு மசோதா அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14ஐ மீறுகிறது என்ற ஒன்றிய அரசின் வாதம் தவறானது. இந்த மசோதாவின் மூலம் சமவாய்ப்பு அனைத்து பிரிவினருக்கும் மருத்துவ சேர்க்கையின் போது வழங்கப்படுகிறது என மாநில அரசு பதில் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் 6  கேள்விகளுக்கு சட்டபூர்வமாக தமிழ்நாடு அரசு பதில் தயாரித்து இருக்கிறது. இதனை ஒரு சில நாட்களில் பதிலை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, நீட் விலக்கு மசோதாவை ஒப்புதலுக்காக குடியரசு தலைவருக்கு அனுப்ப வலியுறுத்த இருக்கிறோம். ஒன்றிய அரசின் கேள்விகள், ஜூலை 5ஆம் தேதி தமிழக சட்ட அமைச்சகத்திற்கு வந்தது. சட்ட வல்லுநர்களின் கருத்துகளை பெற்று பதிலை தயாரித்துள்ளோம். சில தினங்களில் இந்த பதிலை மீண்டும் ஆலோசித்து ஒன்றிய அமைச்சகத்திற்கு அனுப்ப இருக்கிறோம். புதிதாக பொறுப்பு ஏற்கவுள்ள குடியரசு தலைவர் அடுத்தட்டு மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டு, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் கூறினார்.