×

2 தினங்களாக 10 செ.மீ. மழை பெய்தும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை- அமைச்சர் மா.சு.

 

கடந்த இரு தினங்களாக 10 செ.மீ.மழை பெய்தும் சென்னையில் வெள்ள பாதிப்பு  ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம மற்றும் நகர சபை கூட்டங்கள் நடைபெற்றது.அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது மக்கள் பட்டா,சாலை,காலவாய் மற்றும் பேருந்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதேபோல் சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள அயப்பாக்கம் ஊராட்சியை சென்னை மாநகராட்சியோடு இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “
அயப்பாக்கம் ஊராட்சியை விரைவில் சென்னை மாநகராட்சியோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலங்களில் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே 381 நடமாடும் மருத்துவ வாகனங்களும் அது மட்டுமில்லாமல் மழை பெய்து வரும் இடங்கள் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக 10 செ.மீ.மழை பெய்தும் சென்னையில் வெள்ள பாதிப்பு  ஏற்படவில்லை. 

மழை தேங்கியுள்ள ஒரு சில பகுதிகளில் மின் மோட்டார் மூலம் மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு இல்லாமலே எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளை போல் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். சென்னை மாநகராட்சி 330,340 ஆண்டுகளாக வரலாற்றில் இதுவரை 2100 கிலோ மீட்டர் தான் மழை நீர் வடிகால்வாய் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த ஒராண்டில் 1553 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது” எனக் கூறினார்.