×

தமிழ்நாட்டில் விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி- அமைச்சர் மா.சு.

 

மிக விரைவில் தமிழ் வழியில் பாடப் புத்தகங்கள் தயாரான பிறகு ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு தமிழ் வழி மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கை ஒன்றிய அரசிடம் முன்வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்புடைய நவீன மருத்துவ உபகரணங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் திறந்து வைத்தார்.  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அறுவை சிகிச்சை இல்லாமல் நீண்ட நாள் வலியுடன் அவதிப்படுகின்ற முதுகுத்தண்டு வலியுள்ளவர்களுக்கு ரேடியோ அலைவரிசை வழி நிவாரண உபகரணம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இந்த கருவி ரோட்டரி சங்கம் மூலம் நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டுக்குள் நிச்சயம் ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை கருவியை நிறுவப்படும். தனியார் மருத்துவமனையில் 40,000 வரை இந்த சிகிச்சைக்கு செலவு ஆகும். ஆனால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

முழு உடல் பரிசோதனையின் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. கருப்பை வாயிலில் இருக்கும் புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியும் மார்பகப் புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கண்டறியும் வசதி உள்ள கருவிகள் கொண்ட தளம் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தமிழ் வழி மருத்துவக் கல்லூரி வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லையோ மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம். தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.

சென்னையில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.மிக விரைவில் தமிழ் வழியில் பாடப் புத்தகங்கள் தயாரான பிறகு, ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு தமிழ் வழி மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கை ஒன்றிய அரசிடம் முன்வைக்கப்படும். மொழி மாற்றம் செய்வதற்கான பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. மூன்று மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் இதற்கான வேலைகள் முடிவடையும்” என்றார்.