×

மக்களை தேடி மருத்துவம்- ஒரு கோடி பயனாளிகளின் பட்டியலை வழங்க தயார்! ஈபிஎஸ்க்கு மா.சு. பதிலடி

 

மருத்துவத்துறை ஊழியர்கள் பலர் கடுமையாக பணியாற்றி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி அறிக்கை விடுத்துள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 


சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஒன்றிய அரசின் சார்பில் நடைபெற்ற பள்ளி சுகாதரம் மற்றும் ஆரோக்கிய தூதுவர் திட்டத்தின் கருத்தரங்கில் சிறந்த ஒருங்கிணைப்பு செயல்முறை மாநிலம் விருது மற்றும் சிறந்த மாதவிடாய் விழிப்புணர்வு விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது. ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய இவ்விருதுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் தேசிய நலவாழ்வு இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இதுவரை  பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து ஆரோக்கிய தூதுவர் திட்டம் மூலம் 70ஆயிரம் ஆசிரியர்கள் 41 லட்சம் குழந்தைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் சிறந்த மாதவிடாய் விழிப்புணர்வு விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு விளம்பரத்தின் மூலம் 43 லட்சம் இளம் பெண்கள் பயனடைந்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு விருதுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. 

இந்தியா முழுவதும் பாரட்டுகளை பெற்றுள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரின் பாராட்டை பெற்றுள்ளதாகவும் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது. இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர், இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை நேரடியாக வருகை தந்து பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கியுள்ளது. இதுவரை எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நேரடியாக செல்லாத இடத்திற்கு தாம் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

மருத்துவத்துறை ஊழியர்கள் பலர் கடுமையாக பணியாற்றி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காடு தனமாக அறிக்கை விடுத்துள்ளார். எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி விரும்பினால் மக்களை தேடி மருத்துவம் மூலம் பயன்பெற்றுள்ள 1 கோடி பயனாளிகள் பட்டியலை வழங்க தயார்” எனக் கூறினார்.