×

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு

 

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில்  இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன் மாணவர்களின் கல்வி சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டதால் கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தில் 350ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணையில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதில் தவறில்லை. ஆனால், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போராட்டம் ஜனநாயக போராட்டம் அல்ல. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ஆய்வகங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இது நியாயமா?அதே பள்ளியில் படிப்பை தொடர மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். அந்த மனுக்கள் அனைத்தும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.