×

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு - உதகையை சேர்ந்தவரிடம் விசாரனை

 

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக உதகையை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கனகன்டி காவல்நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாலை ஐந்து 15 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆட்டோவில் பயணித்த பயணி கொண்டு வந்த சாக்கு முட்டையிலிருந்து பொருள் வெடித்ததாக கூறப்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பயணியும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர். இருவருக்கும் மங்களூரு நகரில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் விபத்து அல்ல என கர்நாடக டிஜிபி தெரிவித்தார். ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது தற்செயலாக நடைபெற்ற விபத்து அல்ல, பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிவதாகவும்,  இது தொடர்பாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கர்நாடக டிஜிபி தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதகையை சேர்ந்த நபரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியது அம்பலமாகியுள்ளது. மேலும் அந்த நபரை கோவை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்து நாசவேலைக்கு திட்டமிட்டு காயம் அடைந்தவர்கள் கோவை கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.