×

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

 

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடந்தது.  கோயில் வளாகத்திலேயே எளிமையான முறையில் இவ்விழா நடத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா வெகுவாக குறைந்ததையடுத்து சித்திரை திருவிழா இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.  சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10:35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் இன்று கொடி ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். வருகிற 12-ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும்,  13ஆம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.  இதைத்தொடர்ந்து 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.


மேற்கு,தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வைபவம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண, ரூ.200,  500 கட்டண முறையும்,  தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசனம் முறையும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.