×

சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளன - நீதிபதி வேதனை

 

எவ்வித சேதாரமும் இல்லாமல் முன்னோர்கள் வழங்கியுள்ள இயற்கை வளங்களை, வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் அழிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.  

சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம பொருட்களை கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரிகள், பொக்லைன்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், அவற்றை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மணல் மற்றும் கனிமப் பொருட்களை கடத்த பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

எவ்வித சேதாரமும் இல்லாமல் முன்னோர்கள் வழங்கியுள்ள இயற்கை வளங்களை, வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் அழிக்க கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதி, இயற்கை வளங்கள் எதிர்கால சந்ததியினருக்கு தேவைப்படும் என்று கூறினார்  நம் பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளன எனவும்  நீதிபதி வேதனை தெரிவித்தார்.