×

திமுகவின் ஒருவருட ஆட்சிக்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கலாம்- ஜோதிமணி எம்பி

 

மத கலவரத்தை தூண்ட துடிக்கும் பாஜகவை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வரும் திமுகவின் கடந்த ஒரு வருட ஆட்சிக்கு பத்துக்கு பத்து மதிப்பெண் வழங்கலாம் என கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட எம்பி ஜோதிமணி அன்னவாசல், மாங்குடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார், அதனைத்தொடர்ந்து கல்லுப்பட்டி மற்றும் வேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐடிசி தனியார் உணவு உற்பத்தி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை பார்வையிட்டு குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி ஜோதிமணி, “அதிகாரம் இல்லாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரமிக்க தமிழக சட்டப்பேரவையின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஒப்புதலோடு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் போஸ்ட்மேன் வேலையை திறம்பட செய்ய வேண்டும். மாறாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் போல் செயல்படக்கூடாது. ஆளுநர் அரசியல் சாசன வரம்பை மீறுவது என்பது 8 கோடி தமிழக மக்களை அவமதிக்கும் செயல். தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் இருக்கும் போது துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. இது வரம்பு மீறிய செயலாகும்.

குடியரசு தலைவர் அந்த கோப்புகள் குறித்து முடிவு எடுத்துக் கொள்ளட்டும், அவருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுனர் மாளிகைக்கோ, ஒன்றிய அரசாங்கத்திற்கோ, பாரதிய ஜனதா கட்சிக்கோ நாங்கள் அடிமையாக இருக்க மாட்டோம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட திமுக எடுத்துவரும் நடவடிக்கை வரவேற்புக்குரியது, திமுக நெருக்கடியான காலத்தில் பொறுப்பேற்றும் தேர்தல் நேரத்தில் அறிவித்த பல்வேறு நல திட்டங்களை கடந்த ஒரு வருடத்தில் நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குரியது, திமுகவிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றால் பத்துக்கு பத்து மதிப்பளிக்கலாம்” எனக் கூறினார்.