×

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின், தமிழிசை வாழ்த்து

 

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிக வாக்குகள் பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வெற்றி வாகை சூடியுள்ளார்.

அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள தாங்கள், நசுக்கப்பட்ட குரல்களின் பக்கம் துணைநின்று துடிப்பு மிகுந்த அரசியலமைப்பின் பாற்பட்ட மக்களாட்சியை உறுதி செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்ததரராஜன் தனது வாழ்த்துக் குறிப்பில், “பெருமைமிகு நம் பாரத தேசத்தில் 15-வது குடியரசுத்தலைவராக பெண் குடியரசுத்தலைவர் தேர்வானதும் அதுவும் நம் நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்து கொண்டிருக்கிறது.  இந்த தருணம் நாட்டில் உள்ள அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம். சவாலான இந்த உலகத்தில் குக்கிராமத்திலிருந்து குடியரசுத் தலைவராக உயர முடியும் என்பதை நம் இந்திய குடியரசு உணர்த்தியிருக்கிறது. இது அனைவரும் பிரமாண்டமாக கொண்டாட வேண்டிய தருணமாகும். சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார் நம் முதல் குடிமகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மரியாதைக்குரிய மாண்புமிகு திருமதி. திரெளபதி முர்மு அவர்கள்.... மகிழ்ச்சி அடைவோம்...  மனதார வாழ்த்துவோம்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.