×

மாநிலங்களில் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி முறையை அமல்படுத்த பாஜக திட்டம்‌- மு.க.ஸ்டாலின்

 

மாநிலங்களில் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விருதுநகர் அருகே பட்டம் புதூரில் திமுக சார்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழாவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்தார். இவ்விழாவில் பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருது கோவை இரா. மோகன், கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசு, பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விருதுகளை வழங்கிய பின் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், “விருதுநகர் மாவட்டம் கழகத்தின் கோட்டை. சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை, அண்ணா, பெரியார், கழகம் தோன்றியது தான் முப்பெரும் விழா.நமது முன்னோடிகளான பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி கழகத்தை இன்றும் வழி நடத்திச் செல்கிறோம். அவர்களின் பெயரில் கழகத்துக்காக தமது வாழ்வில் தியாகம், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களின் உழைப்பு அளப்பரியது. இந்த விருது அவர்களின் தொண்டுக்கு உரிய பரிசல்ல. தொண்டுக்கு நன்றி சொல்லும் விதமாக வழங்கப்பட்டது. விருதால் அவர்களது உழைப்பை ஈடுகட்டி விட முடியாது.வருங்கால தலமைறைக்கு அவர்கள் வழிகாட்ட வேண்டும் 

கலைஞரின் 4041 கடிதங்கள் 21,500 ஆயிரம் பக்கங்களில் 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. கலைஞரின் படைப்புகளில் இது ஒரு பகுதி தான். மீதமுள்ள எழுத்தையும், பேச்சையும் வெளியிட்டால் 250 தொகுதிகளாக வெளியிட வேண்டும். இந்த கடிதங்களை படித்தால் இந்திய வரலாற்றை அறிய முடியும். கலைஞர் ஒரே ஒரு கடிதம் மூலம் மாநாட்டுக்கு லட்சக்கணகான தொண்டர்களை வரவழைப்பது மட்டுமின்றி ஜனநாயக ஆட்சியையும் கொண்டு வருவார். அதுமட்டுமின்றி ஒரு சர்வாதிகார ஆட்சியையும் வீழ்த்தி விடுவார். அத்தகு ஆற்றல் படைத்தவர் கலைஞர்.

அண்ணா ஆட்சி ,கலைஞர் ஆட்சி போல் ஸ்டாலின் ஆட்சி என்று சொல்லாமல் திராவிட மாடல் ஆட்சி என்கிற பெயர் சூட்டினேன். அப்போது திராவிடம் எனும் சொல் இந்திய அளவில் பெரும் ஈர்ப்பாக அமைந்தது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிரிப்பது தான் ஆரிய மாடல். சமத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, மாநில சுயாட்சி, சகோதரத்துவம் ஆகியன எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. இதனை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளோம். மேற்கண்ட நூல்களை இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒவ்வொருவர் கையிலும் கொண்டு சேர்க்க வேண்டும். அது திராவிட மாடலுக்கு மட்டுமல்ல திமுகவுக்கே வலு சேர்க்கும் 

கழகம் என்பது கட்சிக்காக அல்ல கொள்கைகாக என்பதை தொண்டர்கள் உணர வேண்டும். என்னை நம்பி கழகத்தையும், தமிழ்ச் சமுதாயத்தையும் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார் கலைஞர். அந்த நம்பிக்கையை பாதுகாப்பதே எனது பணி. இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிட்டால், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்த படியாக தமிழகம் உள்ளது. மேலும், 250 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற விகிதாச்சாரத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தவிர, தனி நபர் வருமானம் அதிகம்.பட்டினி சாவு இல்லை. இந்தியா முழுவதும் தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் தமிழகத்தில் 21 பல்கலைக் கழகங்கள் உள்ளன. தமிழர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பெரியார், அண்ணா போன்ற நமது முன்னோடிகளின் நோக்கம். அதன்படி, லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவோடு கழகம் மற்றும் ஆட்சியை வழிநடத்தி வருகின்றேன். கட்சி இல்லாமல் ஆட்சிக்கு வந்துவிடவில்லை.

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் திமுக மட்டுமே ஆளும் கட்சியாக இருக்கும். இது என்னை மட்டுமே மனதில் வைத்து கூறவில்லை. கலைஞரின் நம்பிக்கையைப் பெற்ற தொண்டர்களின் உழைப்பை வைத்து தான் கூறுகின்றேன். கழகத் தொண்டர்கள் எப்போதும் கழகத்தையும், மக்களையும் காப்பதை கடமையாக கொள்ள வேண்டும். ஆட்சியில் இருந்தால் தான் நாட்டை வாழ்விக்க முடியும்” எனக் கூறினார்.