"டியர் ராகுல் மாஸ் பண்ணிட்டீங்க... தமிழர்கள் சார்பில் நன்றி" - வாயார புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!
பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் முதல் நாளே அவர் பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அதில் அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் பயங்கர டிரெண்டானது. அதாவது "பாஜக தன் வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆளவே முடியாது. இந்தியா தமிழ்நாட்டிடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
அதேபோல நிருபர் அவரிடம், "ஏன் அடிக்கடி தமிழ்நாட்டை உச்சரிக்கிறீர்கள்" என கேட்டதற்கு, "நானே தமிழன் தானே" என அசால்டாக சொல்லிவிட்டு நகர்ந்தார். அவர் கொளுத்திப்போட்ட சரவெடி பட்டாசு குமரியில் ஆரம்பித்து காஷ்மீர் வரை வெடித்துக் கொண்டிருக்கிறது. "மாநிலங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளாமல் மத்திய அரசு ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. நம் அரசியலமைப்பு சாசனத்திலேயே மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்திய ஒன்றியம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மாநிலங்களுடன் ஆலோசித்து பிரச்சினைகளைச் சரிசெய்வதே ஒன்றிய அரசின் பணியை தவிர இந்தியாவை ராஜ்ஜியம் என நினைக்க கூடாது. நீங்கள் அதன் மன்னர்களும் இல்லை. இதனை எப்போதும் மறந்துவிடாதீர்கள்” என தமிழ்நாடு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் மாநில சுயாட்சி குறித்தும் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. அவர் பேசிய வீடியோக்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வட இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து மாநில சட்டப்பேரவைகள் நடைபெறவிருக்கும் சூழலில் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தற்போது அவரது பேச்சுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், "அன்பிற்குரிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கருத்தாக்கத்தை புரட்சிகரமாக எழுச்சி உரையாற்றியதற்கு ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் நான் என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன். கலாசார மற்றும் அரசியல் ரீதியாக சுய மரியாதையை முன்னெடுக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு, நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.