×

இலங்கை மக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியுதவி

 

இலங்கை மக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் 13 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மட்டும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில்  நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்வர் அறிவித்து இருந்தார். தாராளமாக உதவும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்.அவரது வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் 13 லட்சத்து 15 ஆயிரம் வழங்கப்பட்டது. அதற்காக, இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் திருமலைக்குமார், அரியலூர் சின்னப்பா, மதுரை பூமிநாதன், தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் 5 லட்சம், மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர்  வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தங்களது ஒரு மாத ஊதியம் தலா 2 இலட்சம், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ரூபாய் 1,05,000;, ஒருவர் ரூபாய் ஒரு லட்சம் என மொத்தமாக ரூபாய் 13 லட்சத்து 15 ஆயிரம், காசோலை மற்றும் வரைவோலையாக வழங்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.