×

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்! போலீஸ் அடித்ததால் உயிரிழந்ததாக புகார்

 

லஞ்சம் கேட்டு கொடுக்காததால் சந்தேகத்தின் பெயரில் சாராய விற்பனை வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் மர்ம முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தட்டரணை கிராமத்தில் குறவர் இன குடும்பத்தினர் 120 நபர்கள் வசித்து வருகின்றனர். தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி மலர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சாராய வழக்கு குறித்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்ய வீட்டிலிருந்த தங்கமணியை திருவண்ணாமலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். விசாரணை முடிந்து தங்கமணியை திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

இரண்டு நாட்களாக கிளைச் சிறையில் இருந்த தங்கமணிக்கு நேற்று மாலை(27.04.2022) உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கிளை சிறை அதிகாரிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கமணி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இதுதொடர்பாக தங்கமணியின் உறவினர்களுக்கு தங்கமணி இறந்து விட்டதாக காவல்துறையினர் நேற்று இரவு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட தங்கமணியின் உறவினர்கள் அவரை போலீசார் அடித்ததால் இறந்தார் என்றும், தங்கள் குறவர் இன மக்கள் என்பதால் தங்கள் மீது பொய்யாக சாராய வழக்கு போடுவதாகவும் சாராய வழக்கு போடக் கூடாது என்றால் ஆய்வாளர் தங்களிடம் ஒரு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாகவும், தனது அப்பாவின் மரணத்திற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தான் காரணம் என இறந்துபோன தங்கமணியின் மகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கிராமத்தார் மீது போடும் பொய் வழக்குகளை போலீசார் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த உறவினர்களை காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாராயம் விற்பனை செய்த தங்கமணியை தாங்கள் கைது செய்ததாகவும் அவருக்கு திடீரென நேற்று  வலி வந்ததாகவும் அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தபோதுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.