×

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருசம் ஆச்சு... இன்னும் கடந்த ஆட்சியை விமர்சிப்பதா? கிருஷ்ணசாமி

 

வரும் 17ஆம் தேதி கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி அமைதி பேரணி நடத்த இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, “ தமிழகத்தின் மிகப்பெரிய நகரம் கோவை. இங்கு பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வேலைக்காக அதிகம் பேர் செல்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நகரமாகவும் கோவை விளங்குகிறது. அதே போல் பயங்கரவாத அமைப்பும் உருவாகிறது. 1998 வெடிகுண்டு விபத்துக்கு பிறகு கோவை மக்கள் மீளவே 15 ஆண்டுகள் ஆனது. இப்போது மீண்டும் சதி நடந்துள்ளது. இது கோவைக்கான பாதிப்பு இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்திற்கான பாதிப்பு. தமிழகம் மற்றும் இந்திய தேசம் அமைதியாக இருக்கின்ற வகையில் வருகிற 17-ம் தேதி அரசியல் சார்பற்ற சமூக பாதுகாப்பை வலியுறுத்தி அமைதி பேரணி நடத்த முயற்சி எடுத்து வருகிறேன். அனைத்து தரப்பு மக்களும் இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்க வேண்டும். 

தென்காசி மாவட்டத்தில் கனிமவளங்களை பாதுகாப்பதற்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம். மாநிலம் வேறு, மத்தியரசு வேறு என்று பிரித்து பேசுவதை திமுக முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் தற்போது 3 நாட்கள் பெய்த மழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதத்திற்கு பின்னரும் எதிர்கட்சியை குறை கூறுவது எப்படி நியாயம்? மழை பெய்யும் போது ரூ.4000 கோடி ஒதுக்கினேன் என்பதை எப்படி ஏற்பது? மழையோடு இந்த பணமும் போய்விடும்” எனக் கூறினார்.