×

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : இதுவரை 257 பேரிடம் மறு விசாரணை

 


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக  257 பேரிடம்  மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மனோஜ், சயான் உள்பட 10 பேரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ்,  2017ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.  கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் திடீர் தற்கொலை செய்து கொண்டார்.  

திரைப்பட பாணியை மிஞ்சும் அளவிற்கு அரங்கேறிய இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களால் இந்த வழக்கு மேலும் சிக்கலானது.  இதனையடுத்து கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் மாதம் மறுவிசாரணை தொடங்கியது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  சயான், மனோஜ், கொடநாடு எஸ்டேட் மேலாளர்,  சசிகலாவின் உறவினர்கள்,   முன்னாள் எம்.எல்.ஏ ஆறு குட்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  

நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,  விசாரணை அடுத்த மாதம் 29 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கு குறித்து தெரிவித்த நீதிபதிகள், “கொடநாடு வழக்கில் இதுவரை 257 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.     வாளையார் மனோஜ், ரமேஷ், தனபால் ஆகியோருக்கு  நிபந்தனை ஜாமீன் கோரியிருந்தனர்.  அவ்வாறு வழங்கப்பட்டால்  சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தோம். இதை ஏற்ற நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.” என்று தெரிவித்தனர்.