×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் விசாரணை

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை கடந்த சில நாட்களாக போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படைகள், ஏற்கனவே விசாரணை நடத்தியவர்களிடம் மறு விசாரணை நடத்தி வருவதோடு, புதிய நபர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதுவரை இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகன், உதவியாளர்கள், அதிமுக பிரமுகர்களான அனுபவ் ரவி, சஜீவன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். 

வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் உயிரிழந்துவிட்டதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த பல்வேறு தரப்பினரிடமும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். கனகராஜ், ஜெயலலிதாவின் ஓட்டுனராக பணியாற்றிவிட்டு பின்னர் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ஆறுக்குட்டியிடம் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து இன்று ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நாராயணசாமியை விசாரணைக்கு அழைத்த நிலையில் அப்போது அவர் இமாச்சலபிரதேசத்தில் இருந்ததால் ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் அவரிடம் விசாரணைக்கு அழைத்த நிலையில் தற்போது அவரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றாது.