×

மாணவி ஸ்ரீமதி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்..

 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த  மாணவி ஸ்ரீமதி,  கடந்த 13 ஆம்  தேதி  உயிரிழந்தார்.  மாணவி இறப்புக்கான சரியான காரணம் தெரியாததால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.  இதனால்  ஸ்ரீமதியின்  உடல் கடந்த 13-ம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில், இன்று காலை அவரது உடல்  பெற்றோரிடம்  ஒப்படைக்கப்பட்டது.  பின்னர்  பலத்த பாதுகாப்புடன்   மாணவி ஸ்ரீமதியின்  உடல்  சொந்த ஊரான, கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திற்கு  எடுத்துச் செல்லப்பட்டது.  

முன்னதாகவே  அசம்பாவிதம் நேராமல் இருக்க   பெரியநெசலூர் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  அந்த  கிராமத்தையே முழுவதுமாக  போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.   அவரது வீட்டில் வைக்கப்பட்ட  மாணவியின் உடலுக்கு   பெற்றோர், உறவினர்கள், ஏராளமான மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   இதனையடுத்து  உயிரிழந்த மாணவி  உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன்   கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ.வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  

மாணவியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என்றும், தகனம் செய்யப்படும் என்றும்  தெரிவித்த நிலையில், பின்னர்  நண்பகலிலேயே நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.  ஊர் மயானத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.. அதேசமயம் இறுதிச் சடங்குகள் முடிந்து , போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.  கிராம மக்கள் சாலையெங்கும் நின்று கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை கொடுத்தனர்.  சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்ய ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்,  மாணவியின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர்,  ஸ்ரீமதிக்கு அவரது தந்தை, கண்ணீர் மல்க  இறுதி சடங்குகளை செய்தார். பின்னர்,  ஸ்ரீமதியின் உடல் அவரின் பாடப்புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.