×

ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டி ??..  திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்.. 

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்திய தேர்தல் ஆணையம்,  காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது.  இதனையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.  இந்த இடைத்தேர்தலில்  போட்டியிட ஒவ்வொரு கட்சியும் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டி வருகின்றன.  கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியதை அடுத்து தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த  இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா  என அவரது குடும்ப உறுப்பினர்களில்  ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர் போட்டியிட விரும்பாதபட்சத்தில், இளங்கோவன்  தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும்  இளங்கோவனை போட்டியிட   வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட போவதாக ஒரு  தகவல் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் காங்கிரஸ், தி.மு.க. இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.  அண்மையில்கூட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என்றும் ஒருபக்கம்  கூறப்படுகிறது.  அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றபோது அவரை வாழ்த்தி கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனையெல்லாம் வைத்து கமல்ஹாசன் ஈரோடுகிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.