×

கள்ளக்குறிச்சி கலவரம்- அவதூறு பரப்பிய யூடியூப் பக்கங்களை களையெடுக்கும் பணி தொடக்கம்

 

கள்ளக்குறிச்சி கலவரச் சம்பவம் தொடர்பாக ட்விட்டர், யூடியூப் தளங்களை கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளதாக கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தகவல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அதன் காரணமாக  கடந்த 17 ஆம் தேதி கலவரம் வெடித்தது. இந்த கலவரச் சம்பவம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசாரும், அதேபோல கலவரச் சம்பவம் தொடர்பாக விசாரணையை தமிழக காவல் துறையால் டி.ஐ.ஜி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டி.ஜி.பி உத்தரவிட்டபோது, கலவரச் சம்பவம் தொடர்பாக ட்விட்டர், யூ-டியூப் போன்ற தளங்களில் பல்வேறு பொய்யான வதந்தி செய்திகள் பரவி வருவதால், அவற்றை கண்காணித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பொய்யான செய்திகளை பரப்பிய தளங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரச் சம்பவம் தொடர்பாக ட்விட்டர், யூ-டியூப் தளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், இதுவரை கள்ளக்குறிச்சி கலவரச் சம்பவம் தொடர்பாக போலியான, தவறான வதந்தி செய்திகள் பரப்பிய 32-க்கும் மேற்பட்ட தளங்கள் குறித்து தனிப்படை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி பகலவன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், எத்தனை வலைதள பக்கங்கள், யூ-டியூப் சேனல்கள் கலவரம் தொடர்பான வதந்தி செய்திகளை பரப்பியுள்ளார்கள் என்பது குறித்து கணக்கெடுத்தபின், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும், அந்தப் பக்கங்களை முடக்குவது குறித்தும் முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் எஸ்.பி பகலவன் தகவல் தெரிவித்துள்ளார்.