×

களத்தில் உயிரிழந்த கபடி வீரர் - தமிழக அரசு நிதியுதவி வழங்க விஜயகாந்த் கோரிக்கை!!

 

கபடி வீரர் விமல், களத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் விமல் என்பவர் பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டார்.  களத்தில் விளையாடிக் கொண்டிருந்த கபடி வீரர் விமல்  மயங்கி விழுந்தார்.  இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர்  ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் புரங்கணி கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் விமல், பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் களத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

மிகப்பெரிய கபடி வீரராக வர வேண்டும் என்ற விமலின் கனவு பாதியிலேயே முடிந்து விட்டது. உயிரிழந்த விமலின் குடும்பத்தினர் ஏழ்மை நிலையில் உள்ளதால், தமிழக அரசு அவர்களுக்கு உரிய நிதியுதவி வழங்க வேண்டும். மேலும் உயிரிழந்த விமலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கபடி வீரர் விமலை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கிடையே கிரிக்கெட், செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பல கோடி  ரூபாய் செலவு செய்து முக்கியத்துவம் அளிப்பது போன்று, தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஊக்குவிக்க வேண்டியதும் அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.