×

ஈரோட்டில் போட்டியிட தைரியம் இருக்கா? அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சவால்
 

 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட தைரியம் இருக்கின்றதா? தனியாக கூட வேண்டாம் அதிமுக கூட்டணியிலேயே நின்று காட்ட முடியுமா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக அரசியலமைப்பை பாதுகாப்போம்-கையோடு கைகோர்ப்போம் என்னும் மாபெரும் பிரச்சார இயக்கத்த்தை முன்னெடுப்பது தொடர்பான மண்டல ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில்  உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை,வேலுர்,சேலம் மாவட்டகளுக்கான மண்டல கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் செங்கம் குமார் ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்  அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்போம் பிரச்சார இயக்கத்தின் தமிழக பொறுப்பாளர் கொடிக்குனில் சுரேஷ்,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லகுமார், மாநிலத் தலைவர் கே. எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ. வி.கே. எஸ் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், நான் அண்ணாமலைக்கு நேரடியாக ஒரு சவால் விடுகின்றேன். அதிமுகவை விட நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொன்னார்கள், அவர் நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நிற்பதற்கு  முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க முடியுமா?தனியாக கூட நிற்க வேண்டாம் அதிமுக கூட்டணியோடே அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கின்றதா?

தைரியம் இருந்தால் அண்ணாமலை நின்று காட்டட்டும். அதிமுக கூட்டணியில் தேர்தலில் நிற்பதற்கு தயங்குகின்றனர். இன்றும் அவர்களுக்கு தேர்தலை சந்திக்க கூடிய ஆற்றல் இல்லை. இவ்வளவு தான் அவர்கள் பலம். அவர்களில் யார் நிற்கின்றார்கள் என்பதே தெரியவில்லை. யார் நிற்க வேண்டும் என்ற பந்தை அவர்களுக்குள்ளேயே உதைத்து கொள்கின்றனர். எங்களோடு மோத தைரியம் இல்லை” எனக் கூறினார்.