×

தீவிரவாதிகளுக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?- கே.எஸ். அழகிரி

 

கோவை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், பாஜக கூறும் குற்றச்சாற்றுகள் உண்மைக்கு புறம்பானது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. பாஜக கூறும் குற்றசாற்றுகள் உண்மைக்கு புறம்பானது. ISIS அமைப்புடன் சம்பந்தபட்டவர்கள் என்பது குறித்து தேசிய புலனாய்வு பிரிவுக்கு தான் தெரியும். அவர்கள் விசாரணை செய்து உறுதி படுத்தினால் தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். தேவையில்லாமல் ஒரு அரசை குறை சொல்லக் கூடாது. தீவிரவாதிகளுக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? வழக்கை தாமதிப்பதாக எவ்வாறு கருத முடியும். ஆளுநர் அரசியலமைப்பின் பிரதிநிதி. அவ்வாறு குற்றச்சாற்று கூறுவது தேவையற்றது. 

தமிழக காவல் துறை, தேசிய புலனாய்வு பிரிவு இணைந்து தான் விசாரணை செய்து வருகிறது. இதனால் ஆதாரங்கள் அழிக்க பட்டு விட்டதாக கூறுவது ஏற்புடையது அல்ல. இந்திய எல்லைக்கு உள்ளே தீவிரவாதிகள் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு வந்து தாக்குதல் நடத்திய போது எப்படி பிரதமர் மீது குற்றசாட்டு சொல்ல முடியும், அது போல தற்போது விசாரணை நடைபெறும் சமயத்தில் தேவையற்ற உண்மைக்கு மாறான சந்தேகங்களை எழுப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்,மத்திய அமைச்சர்கள் மாவட்டங்களில் ஆய்வு செய்வது என்பது மக்களின் பணத்தை விரயம் செய்வது. திட்டங்கள் நடைபெறுகிறது இந்த ஆய்வு என்பது தேவையற்றது. ஆய்வு செய்வதற்கு என்று உரிய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது இந்த ஆய்வு எதற்கு? இது பாஜகவிற்கு முக்கியத்துவம் கொடுக்க செய்யும் வேலையாகும். காங்கிரஸ் கட்சி மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள், வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும்” என்று கூறினார்.