×

"யார் 3ஆவது பெரிய கட்சி? அடித்துக்கொள்ளும் காங்., பாஜக" - கே.எஸ்.அழகிரி விளக்கம்!

 

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டுள்ளது. சொல்லப்போனால் வாரிச் சுருட்டியிருக்கிறது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதன் கூட்டணியிலிருந்து பிரிந்த பாஜகவும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பதிவு செய்யவில்லை. கன்னியாகுமரியில் மட்டுமே அதிக வார்டுகளில் வென்றுள்ளது. 2011ஆம் ஆண்டு நகர்ப்புற தேர்தலை ஒப்பிடுகையில் 1% கூட பாஜக வளவரவில்லை என்பதே உண்மை. 

ஆனால் அக்கட்சி தலைவர்களும் தொண்டர்களும் ஏதோ பெரிதாக சாதித்தது போல கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் மூன்றாம் பெரிய கட்சி நாங்கள் தான் என்கிறார்கள். தமிழ்நாட்டில் தாமரை மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை எனவும் கூறியுள்ளார்கள். இச்சூழலில் இதெல்லாம் பொய் எனக்கூறி காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராகுல் காந்தி , 'தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது' என்று அறுதியிட்டுக் கூறியதை தமிழக மக்கள் உறுதியிட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 

பாஜகவை மீண்டும் நிராகரித்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கிற நீட் தேர்வை ஆதரிக்கிற ஒரே கட்சியான பாஜகவுக்கு தமிழக வாக்காளர்கள் உரிய பாடத்தைப் புகட்டியிருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை விட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்கமுடியாதது. 2011 தேர்தலில் போட்டியிட்டு பெற்ற இடங்களை விட தற்போதைய தேர்தலில் 0.7 சதவீத இடங்களை மட்டுமே அதிகமாக பெற்ற பாஜக, மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. 10 மாவட்டங்களில் வெற்றிக் கணக்கையே தொடங்காத பாஜக, காங்கிரஸ் கட்சியோடு ஒப்பிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், 2011-ல் தனித்து போட்டியிட்ட போது 2.07 சதவீத இடங்களை பெற்றது காங்கிரஸ் கட்சி.

தற்போது 2022 மாநகராட்சித் தேர்தலில் 59.34 சதவீத இடங்களையும், நகராட்சித் தேர்தலில் 4.4 சதவீத இடங்களிலிருந்து தற்போது, 38.32 சதவீத இடங்களையும் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிடுவதை இனியாவது அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிற பாஜக எதிர்ப்புகளை எந்த காலத்திலும் அவர்களால் எதிர்கொள்ள முடியாது. எதிர்காலமே இல்லாத கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. இதனால்தான் இக்கட்சியோடு கூட்டணி வைக்க அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் தயாராக இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.