×

6 பேர் விடுதலையில் ஸ்டாலின் ஆதாயம் தேடுகிறார்- ஜெயக்குமார்

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற  பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் மீது 2021 மே மாதம் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தொடரப்பட்ட வழக்கில் நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ 6 பேர் விடுதலை விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆதாயம் தேடுகிறார். திமுக நினைத்திருந்தால் 7 பேரையும் முன்பே விடுவித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 7 பேர் விடுதலைக்காக திமுக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட்டது கிடையாது. திமுக இந்த நேரத்தில், ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம் என்பதுபோல எங்கே எது நடந்தாலும், அதற்கு நாங்கள்தான் காரணம் என்பது மாதிரி சந்தனத்தைப் பூசிக்கொள்வது. இந்தமாதிரி ஒரு கில்லாடிதனத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி மக்களிடையே தவறான தகவலைப் பரப்பி அதன் மூலம் ஒரு ஆதாயத்தைத் தேடுகிறார்கள். எப்போதும் வாய்மைதான் வெல்லும் ஒழிய பொய்மை வென்றதாகச் சரித்திரம் கிடையாது.

7 பேர் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவின் தொடர் நடவடிக்கையால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக ஏற்றுக்கொள்கிறது. நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுகவின் சார்பில் யாரும் பங்கேற்பதாக இல்லை” எனக் கூறியுள்ளார்.