×

காவல்துறை தூங்குகிறதா? உளவுத் துறையின் தோல்வியே குண்டுவெடிப்புக்கு காரணம்- ஜெயக்குமார் 

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் இருக்கக்கூடிய தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் இடைகால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மா.பா. பாண்டியராஜன் உள்ளிட்டவர் மரியாதை செலுத்தினர். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்ற கொள்கையோடு இன்றும் அனைவரின் மனதில் வாழும் தேவர் பெருமாகனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் புகழஞ்சலி செலுத்தினோம். தேவர் பார்க்காத சிறையே கிடையாது.முக்குலத்தோர் அன்பில் சிறந்த மக்கள். கள்ளர், மறவர், அகமுடையார் ஒரே குடையின் கீழ் வர காரணமானவர் அம்மா தான், எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாதது பெரிய பிரச்னை இல்லை. ஜெயலலிதா ஆட்சியின் போதே அவர் பலமுறை நந்தனத்தில் மாலை அணிவித்து இருந்தார். அதிமுக சார்பாக தலைமை கழக நிர்வாகிகள் பசும்பொன் செல்கின்றனர்.

திமுக அரசாங்கம் அமையும் போதெல்லாம் வெடிகுண்டு, வன்முறை தீவிரவாத கலாச்சார சர்வ சாதாரணமாக தலை தூக்கும். வரும்முன் காப்போம் என்ற வகையில் அரசாங்கம் இருக்க வேண்டும். 6 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. இந்த விவகாரம் துரதிஷ்டத்தில் ஒரு அதிர்ஷ்டமாக போய்விட்டது. உளவுத்துறையின் தோல்வியே இதற்கு காரணம். ஆரம்பகட்ட முதலே அரசு இதை தடுத்திருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் வன்முறை, வகுப்புவாத,துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. திமுக ஆட்சியில் இவை சாதாரணமாக நடக்கும் காரியமாகத் தான் இதை பார்க்க முடியும். மாநில அரசின் சட்ட & ஒழுங்கு யாரிடம் உள்ளது. ஒட்டுமொத்த உளவுத் துறையின் தோல்வி தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணம். காவல் துறை தூங்குகிறதா?” என கேள்வி எழுப்பினார்.