×

8 ஆண்டுகளாக மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வளர்ந்துவருகிறது- ஜேபி நட்டா

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒதுக்கவில்லை என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மதுரை மற்றும் காரைக்குடியில் பாஜக சார்பில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.அங்கு அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூடி பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன், மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து விராகனூர் சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற பல்துறை தொழில் வல்லுனர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய பொது செயலாளர் சிடி.ரவி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜேபி நட்டா, “தமிழ் நிலம் கலாச்சாரத்தின் நிலம். தேச விடுதலையில் தமிழ் மக்களின் பங்கு அளப்பறியது. கடந்த 8 ஆண்டுகளாக மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகமும் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்கு பல தடைகள் இருந்து அது அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் நேரம், உழைப்பு அனைத்தும் சேமிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவை ஜிஎஸ்டிக்கு முன், பின் என இரண்டாக பார்க்கலாம். நாடு முழுவதும் வரி வசூல் அதிகரித்து உள்ளது. 35% ஆக இருந்த குறு சிறு நிறுவனங்களின் வரி வசூலும் 38% ஆக அதிகரித்து உள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 85% மக்கள் வளர்ச்சியடைந்துள்ளனர்.
 
கொரோனவுக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலை 10% ஆக குறைந்துள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதற்காக 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை  பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் 1264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக 134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.  750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் நடைபெற்று அதை மோடி திறந்து வைப்பார்.

மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க 732 கோடி, மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு 392 கோடி, மதுரை மல்லிக்கான ஏற்றுமதி நிலை அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களை மதுரைக்காக மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இந்திய பெண்கள் வாழ்க்கையில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கழிப்பறை கட்டும் திட்டத்தின் வாயிலாக 11.88 கோடி பெண்கள் பயனடைந்து உள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர், மகளிர் உதவி குழுக்களுக்கு கடன் போன்ற பல திட்டங்கள் மகளிர் வளர்ச்சிக்கு செயல்படுத்தப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் 100% மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டங்களால் இந்தியா பல துறைகளிலும் சர்வதேச அளவில் முன்னேறி வருகிறது. கொரோனா காலத்தை மோடி சிறப்பாக கையாண்டார். அது உலகம் முழுவதும் பரவலான பாராட்டை பெற்றது. 2.5 மாதத்தில் கொரோனவை எதிர்கொள்ள தேவையான மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி இந்தியாவை தயாரக்கினார். இதுவரை 217 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று யாரும் முக கவசம் அணியாமல் இருப்பதற்கு காரணம் மோடியின் செயல்பாடுகள் தான். ஷ்யா - உக்ரைன் போர் பாதிப்பில் இருந்து 2 வாரத்தில் இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக நாட்டிற்கு திரும்ப உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மற்ற நாட்டு மாணவர்களும் பத்திரமாக நாடு திரும்ப இந்தியா முயற்சி எடுத்தது” எனக் கூறினார்.