×

இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது - திருமா வருத்தம்.. 

 

வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது  வருத்தம் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், மலம் கொட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் விசிக சார்பில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “வேங்கைவயல் சம்பவம் தேசத்திற்கே அவமானமான செயல். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதை வரவேற்கிறோம். வேங்கைவயல் கிராமத்திற்கு பட்டியலின ஆணையங்கள் செல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

அநாகரிகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை தேவை. தீண்டாமைக்கு எதிரான சிறப்பு படை பிரிவை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இரட்டைக் குவளை முறை தமிழ்நாடு முழுவதிலும் உள்ளது. இந்திய அளவில் சாதி தீண்டாமை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் 10 இடங்களில் உள்ளது. இரட்டைக் குவளை போல் இரட்டை தண்ணீர் தொட்டி, இரட்டை சுடுகாடு போன்றவையும் தவறானது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இரட்டைக் குவளை முறையை ஒழிக்க வேண்டும்.” என்று கூறினார்.