×

பொதுத்தேர்வு மையத்துக்குள் மாஸ்க் அணிவது கட்டாயம்

 

கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து தொற்று பரவல் காரணமாக 2020-21 கல்வியாண்டில் வகுப்புகள் தாமதமாக திறக்கப்பட்டதாலும், கொரோனா 2ம் அலையின் காரணமாகவும்,  கடந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, 10,11ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம் என்ற குழுவின் அறிக்கையின்படி கடந்தாண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. 

கடந்த இரண்டு ஆண்டுகள் தேர்வு நடத்தப்படாததால், இந்த ஆண்டு பொதுத் தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்காக, 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. நாளை மறுநாள் 12ம்  வகுப்புக்கும், 6ம் தேதி 10ம் வகுப்புக்கும், 10ம் தேதி 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனி மனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றாலும் முகக்கவசம் அணிந்தே எழுத வேண்டும்,  ஒரு தேர்வறையில் 20 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுத அனுமதி, தேர்வுப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.