×

பேரிடர் தடுப்பு முன்னேற்பாடுகளை முன்கூட்டியே தொடங்க வேண்டியது அவசியம்!!

 

பேரிடர் தடுப்பு முன்னேற்பாடுகளை முன்கூட்டியே தொடங்க வேண்டியது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில்  குளிப்பதற்காக சிறுமிகள் சுமுதா, பிரியா, மோனிகா, சங்கீதா, பிரியதர்ஷினி கவிதா மற்றும் திருமணமாகி ஒரு மாதமே  ஆன இளம்பெண்  நவநீதா ஆகியோர் சென்ற நிலையில்  தடுப்பணைக்கு அருகே  ஏற்பட்ட சுழல் காரணமாக அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.   நீரில் மூழ்கி மயங்கிய அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  ஆற்றில்  மூழ்கி 7 பேர் பலியான நிலையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன்  உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 



இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.குச்சிப்பாளையம் கீழ்அருங்குணம் பகுதியில், கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் உட்பட 7 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.  தென்மேற்குப் பருவமழை தொடங்கும் சூழலில், மழை, வெள்ளப் பெருக்கு மற்றும் பேரிடர் தடுப்பு முன்னேற்பாடுகளை முன்கூட்டியே தொடங்க வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளது.