×

மாஸ்க் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு மக்களுக்கு மட்டும் தானா? எம்எல்ஏக்களுக்கு இல்லையா? - ஓபிஎஸ்

 

மாஸ்க் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு மட்டும் தானா? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையா? என எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரக் கூடிய நிலையில் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையான முகக்கவசம் அணிய வில்லை என்றும், இந்த விதிமுறைகள் பொது மக்களுக்கு மட்டும்தானா? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முக கவசம், தனிமனித இடைவெளி அவசியம் போன்ற விதிமுறைகள் கட்டாயம் என கொரோனா 3ம் அலையின் போதே முதலமைச்சர் அறிவித்தார் என்றும், அந்த விதிமுறைகள் தற்போது வரை விலக்கிக் கொள்ளப்படவில்லை என்றும்,மூன்றாவது அலை சுமூகமாக முடிந்து, தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், முக கவசம் அணிந்து கொள்வது நம்முடைய நலனுக்கு நல்லது என்றும் கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, முகக்கவசம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும், அணிந்து கொண்டு பேசுவது சிரமம் என்பதால் கழற்றிவைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.