×

 அதிகரித்து வரும் கொரோனா - முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!!

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.  குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று  பரவல்  வேகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தலைமை சுகாதாரத்துறை செயலாளர் , மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு  வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்தால் விமானத்தில் ஏற  தடை விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் “நோ மாஸ்க், நோ எண்ட்ரி”   என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.  பயணிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 அத்துடன் பயணிகள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றுடன்  விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றும்  கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணியாமல் சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு ரூபாய் 500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குரங்கு அமைப்பு காரணமாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.