×

சசிகலா வழக்கை கைவிட்டது வருமான வரித்துறை

 

 சசிகலா மீது தொடர்ந்திருந்த செல்வ வரி கணக்கு வழக்கை கைவிட்டது வருமானவரித்துறை.  இதை அடுத்து சசிகலாவின் செல்வ வரி கணக்கு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.

 கடந்த 1996 மற்றும் 97 ஆம் ஆண்டுகளில் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று சசிகலாவுக்கு எதிராக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு 2001 ஆம் ஆண்டில் சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் அளித்திருந்த பதிலின் அடிப்படையில் சசிகலாவுக்கு அந்த குறிப்பிட்ட ஆண்டில் 4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 மதிப்பிலான சொத்துக்கள் இருந்ததாகவும் ,  இந்த சொத்துகளுக்கு 10 லட்சத்து 13 ஆயிரத்து 271 வரியாக செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.  

 இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்றுக் கொண்ட வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்கு உட்பட்டு மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் 40 லட்சம் ரூபாய் கடனை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

 இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் இன்று நீதிபதிகள் மகாதேவன் , முஹம்மது சபிக் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது .  அப்போது வருமான வரி துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் தரப்பில் , வருமானவரித்துறையில் ஒரு கோடிக்கும் குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என்ற நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பதால் அந்த அடிப்படையில் சசிகலா மீதான செல்வ வரி வழக்கு கைவிடுவதாகவும் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் வாதிட்டது . இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வருமானவரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை முடித்து உத்தரவிட்டார்கள்.