×

கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி விகிதம் சரிந்தது!!

 

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நீட் தேர்ச்சி விகிதம் சரிந்தது.

எம்பிபிஎஸ் , பிடிஎஸ் உள்ளிட்ட  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வை நடத்தி வருகிறது.  நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3570 மையங்களில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்தது. இத்தேர்வினை சுமார் 17.78 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 9.03 லட்சம் பேர் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர் இவர்களில் மொத்தம் 51.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . இது கடந்த ஆண்டு ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.2020ல் 57.44%, 2021ல் 54.40% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டு 51.30 சதவீதமாக சரிந்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 இடங்களை பிடித்தவர்களில் 2 பேர்  மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.  தமிழகத்தில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் தேசிய அளவில் 30வது இடத்தையும்,  தமிழக மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர் .இவர் தேசிய அளவில் 43 வது இடத்தை பிடித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில் தற்காலிக விடை குறிப்பு,  தேர்வின் ஓஎம்ஆர்  விடைத்தாள் நகல்கள் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட்ட வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.