×

அந்த 7 மாவட்டங்கள்.. இன்னும் 3 நாளைக்கு செம மழை இருக்காமே!

 

தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 22ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணத்தால் இன்றிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்றைய தினம் தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதை போலவே திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலான நேற்று மக்கள் குடைகளுடன் வாக்குப்பதிவு செய்ததைக் காண முடிந்தது. 

அந்த வகையில் இம்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 23ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சொல்லப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை வேளைகளில் லேசான பனி மூட்டம் காணப்படும் எனவும்  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.