×

பல்லக்கை தூக்குவேன்! ஆதினத்தை தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் - அண்ணாமலை சவால்

 

பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை போட்டாலும் பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது.  ஆதினத்தை தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அரசுக்கு சவால் விடுத்து இருக்கிறார் அண்ணாமலை.

 தருமபுரம் ஆதீனத்தில் நடக்க இருக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்திருக்கிறார்.

 பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பழக்கத்திற்கு திராவிடர் கழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது.  ஆதினத்தை மனிதர்கள் சுமந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் கூறியிருந்தனர்.   இம்மாத இறுதியில் பட்டின பிரதேசம் நடக்க இருக்கிறது.   இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லக் கூடாது என்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருக்கிறார் .  இதற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இந்த தடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ’’ தர்மபுரம் பட்டினப் பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்’’ என்று மதுரை ஆதினம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  ‘’தருமபுரம் பட்டினப் பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று சட்டசபையில் பேசியிருக்கிறார்.   அப்போது பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,  ‘’ இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் ’’என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 இந்த நிலையில் தமிழக அரசு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தால் பாஜக அதை நடத்த தயாராக இருக்கிறது . ஆதினத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன் என்று அரசுக்கு சவால் விடுத்து இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

 அவர் இதுகுறித்து,  ‘’தருமபுர ஆதினத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது.  ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!  இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். 

கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது.  ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார்.   பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது! ’’என்று தெரிவித்திருக்கிறார்.