×

பாராட்டுக்களால் மகிழ்ச்சியடைகிறேன் - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..

 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகளுக்காக  வரும் பாராட்டுகளால் மகிழ்ச்சியடைவதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது.  தொடர்ந்து  ஆகஸ்ட் 10 வரை 11 சுற்றுகளாக போட்டி  நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் ஒலிம்பியாட் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் 187 நாடுகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள்  பங்கேற்கின்றன.  இதுவரை நடைபெற்ற  செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையெல்லாம்  விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும்.  அதேபோல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த போட்டியில்  6 அணிகளில் 30 வீரர்களுடன் இந்திய அணி களமிறக்குகிறது.

இத்தகைய சிறப்புமிக்க போட்டி இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெறுவது மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது.  இதற்கான தொடக்க விழா கடந்த 29 ஆம் தேதி ( நேற்று  முன் தினம் ) நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இதில்  பிரதமர் நரேந்திர மோடி , தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  தொடக்க விழா முதல்  போட்டிகான ஏற்பாடுகள் வரை அனைத்தையும் த,மிழக அரசு உலகத்தரத்தில் செய்திருக்கிறது. இந்த ஏற்பாடுகளை செய்ய பொதுவாக 18 மாதங்கள் ஆகும் எனவும் , ஆனால் தமிழக அரசு 4 மாதங்களில் செய்து முடித்திருப்பதாகவும் முதல்வர் பெருமிதம் தெரிவித்திருந்தார்.  

 

 செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளுக்காக 95 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்த தமிழக அர்சு,    52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரு அரங்கமும், 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் என இரண்டு பிரம்மாண்ட அரங்கங்களை அமைத்துள்ளது.   ஒரே நேரத்தில் 1,400 வீரர்கள் விளையாடும் வகையில் 700 செஸ் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ,  குடிநீர் வசதி, சாலை வசதி, வீரர்களுக்கான ஓய்வு அறை, வாகன வசதி, மருத்துவ வசதி  என ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.  நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருமே, செஸ் ஓலிம்பியாட் ஏற்பாடுகளை பார்த்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.  

 

 இந்நிலையில்,  இதுகுறித்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், “உலகத் தரம் வாய்ந்த ஏற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து வரும் பதில்களும், பாராட்டுக்களாலும் மகிழ்ச்சி அடைகிறேன் .  வெற்றிக்காக அயராது உழைக்கும் குழுவினரை ஊக்கப்படுத்த , செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.