×

மழைக்காக விடப்பட்ட விடுமுறைகள் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

 

பள்ளிகளில் மழையின் காரணமாக விடப்பட்ட விடுமுறைகள், சனிக்கிழமைகளில் வகுப்புகள் வைத்து சரி செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில்,  ஜனவரி 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் முதலாவது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை (லோகோ) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  வெளியிட்டார்.  அதனைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சரின் இலட்சியம் தமிழகத்தினுடைய பதிப்புகளை உலகமுழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும் என்பது தான். இக்கண்காட்சியின் மூலம் உலகளாவிய புத்தகங்களை நாம் பெறுவதற்கும் நம் தமிழ் இலக்கியத்தை அவர்கள் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும், தமிழ் படைப்பாளர்களின் எழுத்துகள் உலகம் முழுவதும் சென்று சேரும்.

இதற்காக 50 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.  20 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தமிழ் படைப்பாளர்களின் எழுத்துக்கள் உலகம் முழுமைக்கும் சென்று சேரும். 58 பள்ளிகளில் 190 மாணவர்களை தேர்ந்தெடுத்து 30 பேர் அதிலும் தாட்கோ மூலமாக படித்த மாணவர்கள் என மொத்தம் 87 பேர் ஐஐடி-யில் பயில வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இது மிகப்பெரிய வெற்றி பெறக்கூடிய திட்டம். இதில் மாணவிகளும் அதிகளவில் உள்ளனர். எஸ்.சி., எஸ்டி மாணவ – மாணவர்களும் இதில் உள்ளனர். மழைக்காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு,  பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மழைக்காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் வைத்து  அவை ஈடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.