×

சிபிஎஸ்இ மாணவர்கள் கல்லூரிகளில் சேர அவகாசம் - உயர்கல்வித்துறை  அறிவிப்பு..

 


சிபிஎஸ்இ மாணவர்கள் பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை  அவகாசம் அளிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 2021 - 2022 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வை இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ நடத்தியது. முதல் பருவத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் பருவத் தேர்வு  ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்றது. இந்த இரண்டு பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளும் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  ஏற்கனவே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்தபின் 5 நாட்கள் வரை கல்லூரிகளில் சேர அவகாசம் வழங்கப்படும் என  உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.

 அதன்படி  இன்று  சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஜூலை 27 வரை அவசாகம் வழங்கி  உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அத்துடன்  தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே  சிபிஎஸ்இ தேர்வு முடிவு முன்கூட்டியே  வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள  163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.  அதேபோல்  400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக  உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களின் மதிப்பெண்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டு, பெரும்பாலானோர் விண்ணப்பித்துள்ள நிலையில்,  சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இடமில்லை என எந்த தனியார் கல்லூரியும் மறுக்கக்கூடாது என்று  உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிபிஎஸ்இ 12ம்  வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், தற்போது கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கை தாமதமாகியுள்ளது. இந்தச் சூழலில் உயர்கல்வித்துறை ஏற்கனவே அறித்தபடி ,  பொறியியல் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்  சேர மாணவர்களுக்கு 27 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.