×

#BREAKING எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

 

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.  இந்த சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இருதரப்பினரும் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்ட நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இந்நிலையில்  இந்த மனுக்கள்  பலமுறை விசாரிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.  அதில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி ,எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாதத்திற்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலவரம் காரணமாக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதிமுக அலுவலகம் இனிமேல் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் வருகிறது. இதனிடையே  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.