×

அதிரடி சோதனை எதிரொலி - சென்னையில் ஹெல்மெட் விற்பனை படு ஜோர்

 

சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சென்னையில் ஹெல்மெட் விற்பனை  60% முதல் 75 % வரை அதிகரித்து உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னையில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும். போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, சென்னை பெருநகர் காவல்துறை அதிகாரிகள் மற்றும்  பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன சோதனையும் நடத்தி, விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் விபத்துகளைக் கட்டுப்படுத்தி, குறைக்கவும் 23.05.2022 இன்று முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவர்களும், நிச்சயம் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி சென்னையில் 312 இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

போக்குவரத்து காவல் துறையினரின் இந்த உத்தரவால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஹெல்மெட் விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் மற்ற நாட்களை விட  இன்று அதிக அளவில் காணப்படுகிறது. தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அடிப்படையில் 600 ரூபாய் முதல் 14000 வரை ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதாகவும் பெரும்பாலான பொதுமக்கள் தரம் வாய்ந்த ஹெல்மெட்களை வாங்கி செல்வதாகவும் மற்ற நாட்களை காட்டிலும் இன்று விற்பனை 60% முதல் 75 % வரை அதிகரித்து உள்ளதாகவும் வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.