×

தமிழகத்தில் மார்ச் 9 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

 

தமிழ்நாட்டில் மார்ச் 9ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் நீடிக்கிறது. 13கி.மீ. வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாட்டின் கரையை 36 மணி நேரத்தில் நெருங்கும் என வானிலை மையம் தெரிவித்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகரும் திசையில் இருப்பதாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  மேலும் தமிழகத்தில் அடுத்த 4  நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.  

அதன்படி, இன்று  தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும்,  டெல்டா மாவட்டங்களிலும்  கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் நாளை தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

 மேலும் மார்ச் 7 ம் தேதி  தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூரில் ஓரிரு இடங்களில் மார்ச் 8 ம் தேதி  கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அதோடு தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று  வீசும் என்றும் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கிய பிறகு தரையில் ஏற்படக்கூடிய உராய்வின் காரணமாக காற்றின் வேகம் குறையும் எனவும் ,  இதன் காரணமாக  மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்றி வீச வாய்ப்புள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது.