×

அந்த எண்ணம் அரசுக்கு இல்லை..  சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அமைச்சர் சேகர் பாபு கருத்து.. 

 

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் 24 மணி நேர உதவி மையத்தை  அமைச்சர் சேகர் பாபு இன்று தொடக்கி வைத்தார். அதில்,   கோயில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் அறிமுகப்படுத்தினார்.  அதன்பின்னர்  செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த அவர், “சிதம்பரம் கோயிலில் பக்தர்களுக்கு அத்துமீறல் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பொதுமக்களுக்கு குறைகள் இல்லாமல் அத்துமீறல் இன்றி நிர்வாகம் நடத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆதாரப்பூர்வமாக எடுத்து வருகிறோம்.


 
நான் ஏற்கெனவே கூறியது போல், கோயிலை அரசு எடுத்து நடத்தும் வகையில், நாங்கள் எங்களது செயலை முடுக்கிவிடவில்லை. ஆனால், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்டு வரக்கூடிய கோயில் என்பதால், அங்கு நடைபெறக்கூடிய நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டும் என்பதுதான் இந்துசமய அறநிலையத்துறையின் மேலான எண்ணம். தமிழக முதல்வர் சட்டத்தின் ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். சட்டத்தை மீறிய செயல்கள் எங்கு நடந்தாலும் அதை கட்டுப்படுத்த, அதை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். நாங்கள் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.