×

தனியார் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணம் - ராமதாஸ் வலியுறுத்தல்!!

 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கல்லூரி கட்டணத்தை செயல்படுத்தாமல், உடனடியாக சேர அரசே  கட்டாயப்படுத்துவது கட்டணக் கொள்ளையை ஊக்குவிக்கும் என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார். 

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேரும் மாணவர்களில் 50 விழுக்காட்டினருக்கு அரசு கல்லூரிகளின் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிட்டுள்ளது. த்மிழ்நாட்டில் முதற்கட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு  முடிவடைந்து விட்ட நிலையில், கல்லூரி ஒதுக்கீட்டு பட்டியல் வரும் 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதற்குள்ளாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு ரூ.13,610 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று சமீபத்தில் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.


இந்நிலையில் பாமக நிறுவனர்  ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கி வரும் 16-ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் அவரவர் கல்லூரிகளில் சேரும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தாமதத்தை தவிர்ப்பதற்கான இந்த அவசரம் வரவேற்கத்தக்கது!ஆனால், தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள்,  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50%  மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதில் இந்த அவசரம் என்னவானது?



தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்படி தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைக்கப்படும் என்று நம்பி, தனியார் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள், முழுக்கட்டணத்தையும் செலுத்தும்படி தனியார் கல்லூரிகள் கட்டாயப்படுத்தினால் என்ன செய்வர், எங்கே போவார்கள்!தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்படி தனியார் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டும் வசூலிக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணக் கொள்ளையை ஊக்குவிக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.