×

’ஓஹோ நம்ம ஊரு செம ஜோரு’ பாடலுக்கு குட்-பை; புதிய பாடலை அறிமுகப்படுத்தியது சென்னை மாநகராட்சி

 

"எனது குப்பை எனது பொறுப்பு என உறுதி எடுப்போமே " என புதிய பாடலை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறையினால் குப்பைகள் மற்றும் கழிவுகள் தினசரி செகரிக்கப்பட்டு கையாளப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம்  மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் குப்பைகளை வீசக்கூடாது எனவும் கட்டிடக் கழிவுகளை கொட்டக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம், மீறினால் அபராதமும் விதித்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களிடையே குப்பைகள் கையாள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, குப்பைகள் சேகரிக்க செல்லும் பேட்டரி வாகனத்தில் பாடல்கள் ஒலித்துக் கொண்டு செல்லப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் " ஓஹோ நம்ம ஊரு செம ஜோரு சுத்தம் பாரு" பாடல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புதிய பாடல் ஒன்றையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

"எனது குப்பை எனது பொறுப்பு என உறுதி எடுப்போமே" என்ற இந்த மெலடி பாடலில் குப்பைகள் தரம் பிரித்து வழங்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் வரிகள் இடம்பெற்றுள்ளது . இனி குடியிருப்பு பகுதிகளில் குப்பைக் கழிவுகள் சேகரிக்க செல்லும் வாகனங்கள், இந்த பாடலையும் ஒலிபெருக்கியவாரே பணிகளை மேற்கொள்ளும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.