×

விநாயகர் சதுர்த்தியன்று 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

 

விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் 1.25லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட இருப்பதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.


காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கடந்த ஜூன்.28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கி 33 வது நாளாக காஞ்சிபுரத்துக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் வந்திருந்தனர்.நாளை சென்னையில் நிறைவுபெறவுள்ள நிலையில் இந்து முன்ணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தது.

நீர்நிலைப் புறம்போக்குகளை இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் இந்துக்கோயில்கள் இடிக்கப்படுகின்றன.அதே நீர்நிலைப் புறம் போக்கில் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களும் செயல்படுகின்றன.அவற்றையோ பிற மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களையோ அரசு இடிப்பதில்லை.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகில் பக்தர்கள் தங்குவதற்காக பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட யாத்ரி நிவாஸ் கட்டிடம் கட்டி முடித்து 3 ஆண்டுகளாகியும் திறக்கப் படாமலேயே இருந்து வருகிறது.இதை திறக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

கோயில் நிலங்கள் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் அளவில் போலியாக பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதை அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.கோயில்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது.இதை பக்தர்கள் வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருநாளாகும்.அந்நாளில் தமிழகத்தில் 1.25லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.750 இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலங்களையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.விநாயகர் சிலைகள் செய்வோரை அரசு இடையூறு செய்யாமல் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாநில செயலாளர் என்.ரவீந்திரன்,மாவட்ட துணைத் தலைவர் சி.ஆர்.ராஜா,காஞ்சிபுரம் கோட்ட செயலாளர் ஆர்.டி.மணி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தோஷ் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.